கலெக்டர் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஜன. 26: இந்திய அரசியல் அமைப்பின்படி இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனையொட்டி வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 12வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், புதிய வாக்காளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற கட்டுரை எழுதுதல், முழக்கம் எழுதுதல், ஓவியப்போட்டி, சுவரொட்டி வரைதல், நடனப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். இவ்விழாவில், டிஆர்ஓ பழனிகுமார், கலெக்டர் பிஏக்கள் ஜெயப்பிரீத்தா (பொது), வைத்தியநாதன் (தேர்தல்), தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: