சி.முட்லூர் கிராமத்தில் கன்னித்திருவிழா சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்து வழிபாடு

சிதம்பரம், ஜன. 26: சிதம்பரம் அருகே உள்ளது சி.முட்லூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கன்னித் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். அது போல் இந்த ஆண்டும் இந்த கிராமத்தில் கன்னித்திருவிழா களை கட்டியது.

காணும் பொங்கல் தினத்தில் கிராம மக்கள் தங்களது தெரு சந்திப்பில் சிறிய கொட்டகை அமைத்து கன்னி சிலைகளை வைத்து அதற்கு பல்வேறு பூஜைகள் செய்வர். இவ்வாறு நடைபெறும் பூஜைகளில் கிராம மக்கள் பங்கேற்று தங்களது வேண்டுதல்களை நினைத்து வழிபடுவர். இந்த கிராமத்து மக்கள் நலமுடன் வாழவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக வேண்டியும் பொதுமக்கள் வழிபட்ட கன்னித் திருவிழாவின் 10ம் நாள் நிறைவு விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தினமும் வழிபட்ட கன்னி சிலைகளை இளைஞர்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஏராளமான கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கன்னி சிலைகளுக்கு முன்பும், பின்பும் ஆட்டம் ஆடியும், பாட்டுப் பாடியும், கும்மியடித்தபடியும் சென்றனர். பின்னர் இறுதியில் கிராம மக்கள் அருகில் உள்ள வெள்ளாற்றுக்கு சென்றனர். அங்கு இளைஞர்கள் கன்னி சிலைகளுடன் ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் கன்னி சிலைகளை கரைத்து வழிபட்டனர்.

Related Stories: