சேத்தியாத்தோப்பு அருகே முதியவர் அடித்து கொலையா?

சேத்தியாத்தோப்பு, ஜன. 26: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வேல்முருகன் (50). இவருக்கும், கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி (40) என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் அடிக்கடி மகாலட்சுமி வீட்டுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகனும், இவரது நண்பர் எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரனும் (34) குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது வேல்முருகன் நண்பருடன் மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். இதில் திடீரென வேல்முருகனுக்கும், மகாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த மகாலட்சுமியின் கணவர் சிவக்குமார் (47) இதை பார்த்து அவர்களை கண்டித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தராறில் வேல்முருகன் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேல்முருகள் மகன் சீனுவாசன் (24) சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவக்குமார் மனைவி மகாலட்சுமி, சிவக்குமார், காட்டுராசா மகன் எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: