×

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டில் இடம்பெறாததால் அதிர்ச்சி கலெக்டர் ஆபிசில் மாணவி முறையீடு

சேலம்:அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டில் இடம் பெறாததால், அதிர்ச்சியடைந்த மாணவி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஜலகண்டாபுரம் அடுத்த கரிக்காப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. தறித்தொழிலாளியான இவரது மகள் கஸ்தூரி. நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இருவரும் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து மாணவி கஸ்தூரி கூறுகையில், ‘‘ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020ம் ஆண்டு படிப்பை முடித்து விட்டு, கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டேன். அதில், 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மருத்துவ தரவரிசை பட்டியலில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் எனது பெயர் இடம்பெறவில்லை.

அதேசமயம், என்னை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம் பெற, எம்பிசி பிரிவில் 230 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது. ஆனால், 252 மதிப்பெண்கள் பெற்றும், எனது பெயர் இடம் பெறாதது, வேதனை அளிக்கிறது. எனது பெயர் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Shock Collector's Office ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்