பர்கூர் ஒன்றியத்தில் ₹2.62 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

கிருஷ்ணகிரி:பர்கூர் ஒன்றியத்தில் ₹2 கோடியே 62 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

பர்கூர் ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி இருளர் காலனியில், 52 இருளர் இன மக்களுக்கு தலா ₹3 லட்சம் மதிப்பில் மொத்தம் ₹1 கோடியே 56 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகள், ஒப்பதவாடி ஊராட்சி புதிய கிருஷ்ணா நகர் இருளர் காலனியில், 34 இருளர் இன மக்களுக்கு ₹1 கோடியே 2 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதிய வீடுகள் ஒப்படைத்த பிறகு, கழிவறைகள் மற்றும் வீடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  பின்னர், சின்னகோட்டூர் கிராமத்தில், தனிநபர் விவசாய நிலத்தில் ₹2 லட்சம் மதிப்பில் மாந்தோட்டத்தில் சமஅளவு மண்வரப்பு அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு குழிகள் அமைக்கும் பணிகளை அளவீடு செய்து, பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என பிடிஓக்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, பிடிஓக்கள் அன்னபூரணி, வெங்கடராமகணேஷ், பொறியாளர் கோவிந்தராஜன், பணி மேற்பார்வையாளர் அய்யப்பராஜா, எமக்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: