சித்தா மருத்துவமனைகளில் ஆஸ்துமா மருந்துகள் சப்ளை பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

தேவாரம்: தேனி மாவட்டத்தில் செயல்படும் சித்த மருத்துவமனைகளில் மழைக்கால முக்கிய நோயாக  உள்ள மூச்சிறைப்பு(வீசிங்) மற்றும்  ஆஸ்துமா மருந்துகள் குறைக்கப்பட்டுள்ள  நிலையில் நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1,491 ஆயுஷ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் 1058 இடங்களில் சித்தா பிரிவும்,  101  இடங்களில் ஆயுர்வேதா, 66  இடங்களில் யுனானி, நேச்சுரோபதி 158  இடங்களிலும்  செயல்படுகிறது. அலோபதிக்கு மாற்றாக ஆயுஷ்  உள்ளதால் இயற்கை மருத்துவத்தை விரும்புபவர்கள்  அதிகமான அளவில் செல்கின்றனர். பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு  ஒருமுறை அனைத்து ஆயுஷ்  மருந்தகங்களுக்கும்  மருந்துகள்  சப்ளை  செய்யப்படுகிறது. இதில் சித்தமருத்துவத்தில்  சப்ளை செய்யப்படும் மருந்துகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக  மழைக்காலம், குளிர்காலங்களில்  ஆஸ்துமா  நோயாளிகளை மிகவும்  பாதிக்ககூடிய வீசிங்,  சளி தொந்தரவுகளுக்கு சப்ளை செய்யப்படும்  மருந்துகள் மிககுறைவான நிலையில் வருவதால் ரெகுலராக சாப்பிடுபவர்கள் திண்டாடி  வருகின்றனர். குறிப்பாக சளி, இருமல் போன்றவற்றை கட்டுப்படுத்தக்கூடிய  தாளிசாதிபத்திரி  என அழைக்கப்படும் மருந்தில் சுக்கு,  மிளகு,  திப்பிலி உள்ளிட்ட  20 வகையான இயற்கை மருந்துகள் சேர்க்கப்படுகின்றன.

ஆஸ்துமா  நோயாளிகளுக்கு மிகவும்  முக்கிய மருந்தாக இது விளங்குகிறது. இதேபோல் சுவாசகுபேளி மாத்திரை வறட்டு இருமலை போக்குவதுடன், சளியை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது, இது தவிர ஆடாதொடை மணப்பாகு  இயற்கையாகவே  பிளட்லெட் எண்ணிக்கையை கூட்டும். சுக்கு,  மிளகு, திப்பிலி போன்றவற்றை  சேர்த்து தயாரிக்கப்பட்ட திரிகடுகசூரணம் மற்றும்  ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்துக்களின்  சிப்பியில்    இருந்து தயாரிக்கப்படும்  முத்துச்சிப்பி  மாத்திரை போன்றவை ஆஸ்துமா மற்றும் மூச்சிறைப்பு நோயாளிகளுக்கு பெரும் இயற்கை நிவாரணமாக உள்ளது. இவை தற்போது பனிக்காலமாக இருப்பதால் அதிகமாக சித்தமருத்துவ நிலையங்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதால் பொதுமக்கள் திண்டாட்டம் அடைகின்றனர். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் செயல்படக்கூடிய ஆயுஷ் என அழைக்கப்படும் சித்தமருத்துவ நிலையங்களில் இதேநிலைமைதான் உள்ளது.

இதுகுறித்து சித்த மருத்துவ வட்டாரங்களில் கேட்டபோது, சித்த மருத்துவமனைகளுக்கு  நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.  இங்கோ இயற்கை  மூலிகைகள் மற்றும்  சித்தர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து  மாத்திரைகள்  கிடைப்பதில்லை. காரணம் கேட்டால் நிதி ஒதுக்கீடு   குறைவாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் நோயாளிகள்  எல்லோருக்கும்  தற்போது எல்லாமருந்துகளும் கிடைப்பதில்லை. நிலவேம்பு பொடியை மட்டுமே வைத்து சித்த மருத்துவமனைகளை நடத்தமுடியாது. ஆஸ்துமாவிற்கு தேவையான மிக முக்கிய மருந்துகளை உடனடியாக சப்ளை செய்யவேண்டும். தற்போது வந்துள்ள மருந்துகள் 10 முதல் 20 சதவீதத்திற்கும்  குறைவானதே என்றனர்.

Related Stories: