உடுமலை அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காகித ஆலையை மூட வேண்டும்

திருப்பூர்:  உடுமலை அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காகித ஆலையை மூட வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித்திடம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

உடுமலை வட்டாரம் பள்ளபாளையம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. பல்வேறு ஊர்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்து பேப்பர் தயாரிக்கும் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் துர்நாற்றம், கழிவுநீரால் இந்த பகுதி மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

முற்றிலும் விவசாயம் செய்யும் இந்த கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் இயங்கும் இந்த ஆலை வெளியேற்றும் கழிவுநீரால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் பல மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து வருகின்றன. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த காகித ஆலையை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி, துணைத்தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் கோகுல்ரவி, ஏர்முனை இளைஞர் அணி துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: