கொரோனா, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

ஊட்டி:  கொரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். குன்னூர் தேயிலை வாரியம் செயல் இயக்குநர் பாலாஜி குறும்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா  மற்றும் ஒமிக்ரான் நோயினை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல் போன்ற நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழித்திரு நீலகிரி, பாட்டி வைத்தியம் ஆகிய 2 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்டத்திலுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உன்னத உதகை என்ற தலைப்பில் குறும்படமும் வெளியிடப்பட்டது. எனவே, பொதுமக்கள் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையான கொரோனா நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்த்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயரமான், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜாகீர் உசேன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: