12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

ஊட்டி: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில்  12வது தேசிய வாக்காளர் தினம் 2022ஐ முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், தேர்தல்  பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பதக்கம்  மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், 18 வயது பூர்த்தியடைந்த இளம்  வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டைகள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை  வகித்தார். குன்னூர் தேயிலை வாரியம் செயல் இயக்குநர் பாலாஜி கலந்து  கொண்டு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி  வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இளம்  வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொளள்ப்பட்டு  வருகிறது.

குறிப்பாக, வரும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது  ஜனநாயக கடமையினை நிலை நாட்ட வேண்டும் என்பதனை குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை அதனை  எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க கூடாது.

ஒவ்வொரு வாக்காளர்களின்  வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி தங்களது  வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

18 வயது பூர்த்தியடைந்த இளம்  வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி  தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டும். தேர்தல் நாளன்று அச்சமின்றியும்,  மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும்  அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கு உட்படாமலும் பணம், பரிசு பொருட்கள் ஏதும்  பெறாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக,  12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழியினை  அனைத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர்  திட்டம்) ஜாகீர்உசேன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)  தனப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, தனி வட்டாட்சியர்  (தேர்தல்) புஷ்பாதேவி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: