குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில எல்லை, சுற்றுலா தலங்களில் 500 போலீசார் பாதுகாப்பு

ஊட்டி:  குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் போல் சமூக விரோதிகள் ஊடுருவக் கூடும் என்பதால், போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக - கேரளா எல்லையோர வனப்பகுதிகளில் மாவோஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், குடியரசு தினத்தன்று பாதுகாப்பு கருதி எல்லையோர கிராமங்களில், சோதனை சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் நக்சல் ஒழிப்பு போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு ஏடிஎஸ்பி., 5 டிஎஸ்பி மற்றும் 25 இன்ஸ்பெக்டர் தலைமையில் 500 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி, தமிழக - கேரள எல்லைகளான நாடுகாணி, எருமாடு, தாளூர், முள்ளி, கிண்ணக்கொரை, அப்பர்பவானி உட்பட மாநில எல்லைகளில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இதுதவிர, அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து காட்டேஜ் மற்றும் லாட்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியுள்ளனரா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை துவக்கியுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியிருந்தாலோ அல்லது அறைகள் கேட்டாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்டர்நெட் மையங்களிலும் புதிதாக யாரேனும் வந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி காவல்துறை துறை அதிகாரிகள் கூறுகையில்,``மாவட்டத்தில் உள்ள அனைத்து காட்டேஜ், லாட்ஜ்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதலாக போலீசர் நியமிக்கப்பட்டு ரோந்து மற்றும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், என்றனர்.

Related Stories: