மதுபாட்டில் சப்ளை ஒப்பந்தம் நீடிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 278 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதில் மதுபான கடைகளுக்கான பார் ஏலம் விடும் விவகாரத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை வடக்கு பகுதியில் உள்ள சுமார் 145 மதுபான கடைகளுக்கு மதுபான பாட்டில் சப்ளை செய்யும் பணிக்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்ட நிலையில் புதிதாக டெண்டர் விடப்பட்டு, உரிய நடைமுறை விதிகளின்படி ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணி வழங்கப்படவேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனமே தொடர்ந்து அனைத்து வகையான மதுபாட்டில்களையும் குடோன்களில் இருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு ஆண்டிற்கு மதுபாட்டில் சப்ளை செய்ய கால நீட்டிப்பு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபாட்டில்கள் சப்ளை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிகிறது. எப்.எல் உரிமம் பெற்ற தனியார் பார்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பவேண்டிய மதுபாட்டில்களை முறைகேடாக சப்ளை செய்வதாக தெரிகிறது. இதன் மூலமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையான ஒப்பந்தப்புள்ளி மூலமாக மதுபாட்டில்களை சப்ளை செய்ய அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை தெற்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபாட்டில்கள் வாகனங்களில் சப்ளை செய்யும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி இந்த டெண்டர் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வடக்கு மாவட்டத்திலும் மதுபாட்டில் சப்ளைக்கு டெண்டர் விட்டு முறையான வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கவேண்டும். அப்போதுதான் மதுபாட்டில் சப்ளையில் முறைகேடு நடக்காது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: