கொலை மிரட்டலை கண்டித்து கொடுமுடி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொடுமுடி: கொடுமுடி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பணியார்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி ஒன்றியக்குழு 1,2,4 வார்டு உறுப்பினர்கள் டி‌.பழனிசாமி, எ.பழனிசாமி, பரமசிவம் மற்றும் 5வது வார்டு உறுப்பினரின் கணவர் சின்னசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து புதிதாக வாங்கப்பட்ட  பிரிண்டர் தொடர்பாக துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலைமிரட்டல் விடுத்ததுடன் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொடுமுடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் வட்டாரதலைவர் ரவி தலைமையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட மைய செயலாளர் கிருஷ்ணசாமி,துணைத்தலைவர்கள் சின்னசாமி, லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், 10 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் வார்டு உறுப்பினர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, ஊழியர்களுடன் ஏஎஸ்பி கௌதம் கோயல், இன்ஸ்பெக்டர் முருகன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் புகாருக்கான மனு ரசீது வழங்கினர்.

Related Stories: