திம்பம் மலைப்பாதையில் காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம்:   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை ஆகிய  பகுதிகளில் தக்காளி, உருளைக் கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு விதமான காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகிறது.  

இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் லாரிகளில் ஏற்றி திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு  செல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து தக்காளி பெட்டிகள் மற்றும் காய்கறி மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை 14-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

லாரி கவிழ்ந்ததால் அதில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலை முழுவதும் சிதறின. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

Related Stories: