கொரோனா சிகிச்சை வார்டில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் மக்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்

செங்கல்பட்டு: .சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதுகுறித்து, அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. தமிழக அரசின் ஆணைப்படி, மாவட்ட நிர்வாகம் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் சிறிதும் கூட அச்சமோ, பதற்றமோ இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என தனித்தனி வார்டுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், அடிக்கடி வார்டில் இருந்து வெளியே சென்று, டிபன் சாப்பிட்டுவிட்டு அலட்சியமாக வார்டுக்கு வருகின்றனர்.

அதேபோல், நோயாளிகளை சந்திக்க வரும் உறவினர்கள், சர்வ சாதாரணமாக கொரோனா தன்மையை அறியாமல், அலட்சியமாக குழந்தைகளுடன், முகக்கவசம் அணியாமல் பிக்னிக் செல்வது போல் வந்து செல்கின்றனர். இதில், மருத்துவமனை நிர்வாகம் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையின்போது கடைபிடித்த விதிமுறைகளை தற்போது கடைபிடிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இன்னும் கொரோனா பற்றி தெளிவு வரவில்லை. மருத்துவமனைக்கு வருபவர்களை முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வார்டில் உறவினர்களை அனுமதிக்க கூடாது. நோயாளிகளை வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. மருத்துவமனை நிர்வாகம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், நோயாளிகளையும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணித்து அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தினால் மட்டுமே கொரோனா தொற்று மேலும் பரவாமல்  தடுக்கமுடியும் என்றனர்.

Related Stories: