தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் தலைமை தாங்கி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் உறுதி மொழியை வாசித்தார். அதனை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே வாக்காளர் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப்போட்டி, சொற்தொடர் போட்டி, சுவரொட்டி போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன், பயிற்சி உதவி கலெக்டர் அனாமிகா ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முரளி, வித்யா, வட்டாட்சியர்கள் செந்தில்குமார், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: