நீதிமன்றங்களை திறக்க கோரி சென்னை ஐகோர்ட் முன் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன.26: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களை திறந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையென்றால் வருகிற 11ம்தேதி சென்னை ஐகோர்ட் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரதாப், பொருளாளர் விஸ்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு மாநில தலைவர் நந்தகுமார், பொருளாளர் ஆர்.மகேஷ், பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்ரமணியம், தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துராமலிங்கம், நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், குழித்துறை சங்க தலைவர் சுரேஷ், இரணியல் சங்க தலைவர் ஜோசப்ராஜ் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உடனடியாக நீதிமன்றங்களை திறந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வருகிற 11.2.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வழக்கறிஞர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக R1 லட்சம் வழங்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களை பொறுத்து, உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் போது, கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து கொண்டு கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். கொடுங்கையூரில் சட்டம் முடித்த அப்துல் ரகீம் என்பவரை  தாக்கிய காவல்துறையினரை உடனடியாக இடைநீக்கம் செய்து சட்டம் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

Related Stories: