குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம் குமரி முழுவதும் 1000 போலீஸ் பாதுகாப்பு விடிய, விடிய வாகன சோதனை

நாகர்கோவில், ஜன.26:  நாகர்கோவிலில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்டம் முழுவதும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 73 வது குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கலெக்டர் அரவிந்த் தேசிய ெகாடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார். எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 45 நிமிடங்களில் விழா முடிவடையும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, தேங்காப்பட்டணம், குளச்சல், அஞ்சுகிராமம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடந்து வருகிறது.  ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பார்சல்கள், பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர். தண்டவாளங்கள், ரயில்வே பாலங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடந்தது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி இன்று அரசு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால், கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரோடி முதல் கூடங்குளம் வரை கடலோர காவல் நிலைய போலீசார் படகில் சென்று கண்காணித்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள லாட்ஜுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் இருந்து விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் வந்த அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே காவல்துறையினர் அனுமதித்தனர். விழா நடைபெறும் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. எஸ்.பி. பத்ரி நாராயணன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழா நடைபெறும் அண்ணா ஸ்டேடியத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலையில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: