×

பக்தர்களிடம் சோதனை தஞ்சை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சாகுபடி நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் நடவடிக்கை

தஞ்சை, ஜன.26: தஞ்சை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தஞ்சை பைபாஸ் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் சாகுபடி பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் 5 ஏக்கர் நிலமும் பல ஆண்டுகளாக அரசு அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த நிலத்தை பறிமுதல் செய்து அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள 5 ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்வது குறித்து கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி அந்த நிலத்தை பயன்படுத்தி வரும் சோமசுந்தரம் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசின் சொத்தாக இருக்கிற நிலத்தை அனுமதி பெறாமல் தாங்கள் அனுபவித்து கொண்டு வருவது தெரிய வருகிறது. எனவே உங்களை அந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி அதில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பயிர்கள் விளைச்சல் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை வரும் பிப்.5ம் தேதிக்குள் ஆஜராகி சாலியமங்கலம் வருவாய் ஆய்வாளர் அல்லது தாசில்தார் முன்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலம் பட்டுக்கோட்டை மெயின் ரோடு ஓரத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Tanjore ,
× RELATED தரத்திற்கான புவிசார் குறியீடு...