×

சிவகாமிபுரத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரம்

வல்லம், ஜன.26: ஆலக்குடி அருகே சிவகாமிபுரத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதிலாக புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தினகரன் செய்தி எதிரொலியால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் பகுதியில் பள்ளி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தூண்கள் சிதிலமடைந்து உள்ளதால் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த இடம் சரியில்லை என்று தற்போதுள்ள தொட்டி அருகிலேயே பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு அஸ்திவாரத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு அப்படி நிறுத்தப்பட்டது. அருகிலேயே பள்ளி உள்ளதால் இந்த பள்ளத்தில் குழந்தைகள் விழுந்து காயம்படும் நிலை உள்ளது. எனவே பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று தினகரனில் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது பள்ளிக்கு அருகில் தஞ்சை செல்லும் சாலையில் மீண்டும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட மூன்றாவதாக இடம் தேர்வு செய்து பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டு பணிகளை துரிதப்படுத்த உதவிய தினகரன் நாளிதழுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

Tags : Sivakamipuram ,
× RELATED திருத்தணி ஆர்.கே. பேட்டையில்...