(தி.மலை) பட்டா மாறுதல், வாரிசு சான்று வழங்கக்கோரி குவிந்த மனுக்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி செங்கம் பகுதியில்

செங்கம், ஜன.25: செங்கம் பகுதியில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்று வழங்கக்கோரி மனுக்கள் குவிந்தது. அவ்வாறு குவிந்த மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகளின் அலட்சியம் காட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். செங்கம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெறவும், குறிப்பாக பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நிலம் மற்றும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து முறையாக அனைத்து ஆவணங்களையும் அரசு இ-சேவை மையத்தில் பதிவு செய்தும் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

மேலும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர், தலைமையிட வட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளிடம் அலைந்து திரிந்தும், அதிகாரிகள் சான்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதேபோல் பெற்றோர்கள் இறந்தபின் வாரிசு சான்று கேட்டு முறையாக விண்ணப்பித்தும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சான்றுகள் வழங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பெயரளவில் நடந்த முகாம்களில் பட்டா மாறுதல் என்பது கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு செங்கம் பகுதியில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்று கோரி விண்ணப்பித்திருக்கும் பயனாளிகளுக்கு விரைவில் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: