நடப்பு கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை: ஒன்றியஅரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், 100 மாணவர்கள் மாநில சேர்க்கையிலும், 50 மாணவர்கள் எய்ம்ஸ் சேர்க்கையிலும் இருப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

நிகழ்ச்சியின் போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம்  இதுவரை 46 லட்சத்து 37,974 பேர் பயனடைந்துள்ளனர். 37 லட்சத்து 18,143  தொடர் சேவைகளை பெற்றுள்ளனர். வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவு 15 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி, உடல் முழுவதும் ஏற்படும் நரம்பு வலிக்கான சிகிச்சை மற்றும் நீண்ட நாட்களாக உள்ள புற்றுநோய் வலி உட்பட எல்லாவிதமான வலிகள் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.

சிறப்பு சிகிச்சைகளான வலி நரம்புகளை கட்டுப்படுத்துதல், வலி நரம்புகளை முடக்குதல், ரேடியோ அலை நரம்பு சிதைப்பு சிகிச்சை, வலி இருக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு வலி நிவாரண மருந்து செலுத்துதல், தொடர்ந்து வலி நிவாரண மருந்து அளித்தல் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த வலி நிவாரண சிகிச்சை அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி மற்றும் ரத்தத்தில் உயிர்வேதியியல் அளவுகளை துல்லியமாக கணக்கிடும் தானியங்கி கருவி  நிறுவப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு அபிராமி ராமநாதன்ரூ.15 லட்சமும், சென்னை ரோட்டரி கிளப் ரூ.7 லட்சமும் வழங்கி உதவியுள்ளனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து 13 வழிகள் மூலமாக கோவைக்கு வந்துக் கொண்டிருக்கின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க வசதியுள்ளது. 100 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறவுள்ளது. அதனால், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களை அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கலாம் என்ற ஆலோசனையை தெரிவித்திருக்கிறோம். ஒன்றிய அரசும் ஒப்புதல் தரும் நிலையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம். 100 மாணவர்கள் மாநில சேர்க்கையிலும், 50 மாணவர்கள் எய்ம்ஸ் சேர்க்கையிலும் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* தொற்று குறைந்தால் ஊரடங்கு தேவையில்லை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 1965ம் ஆண்டு மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் வீரர் ஒ.அரங்கநாதன் நினைவிடத்திற்கு சென்று நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு தியாகி அரங்கநாதன் இல்லத்துக்கு சென்று அவரது துணைவியார் மல்லிகா அரங்கநாதன் மற்றும் மகன்களை சந்தித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: பொங்கல் விழாவையொட்டி மாநகர பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றதால் தொற்று நோய் பரவல் உயர்ந்து உள்ளது. இன்னும் மூன்று தினங்களில் தொற்றின் பரவலின் உண்மை நிலை தெரியவரும். தொற்றின் பரவல் குறைந்தால் நிச்சயம் ஊரடங்கு என்பது தேவையில்லை.

Related Stories: