தள்ளுவண்டி, காய்கறிக்கடைகளில் பயன்படுத்தும் தராசில் பெருமளவில் மோசடி ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சேலம்: தள்ளுவண்டி, காய்கறிக்கடைகளில் பயன்படுத்தும் தராசில் எடை நிறுத்துவதில் பெரும் அளவில் மோசடி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எலக்ட்ரானிக் தராசு, இரும்பு தட்டு தராசு உள்பட பலவகையான தராசுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் இரும்பு தட்டு தராசில் பொருட்கள் எடை போடுவதில் ஏகப்பட்ட மோசடி நடந்து வருகிறது. குறிப்பாக தள்ளுவண்டி, காய்கறிகடைகளில் பயன்படுத்தும் தராசில் எடை நிறுத்துவதில் பெருமளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொருட்கள் எடை போடும் தராசில் பெரும் மோசடி நடந்து வருகிறது. குறிப்பாக இரும்பு தட்டு தராசில் தான் எடை மோசடி அதிகளவில் நடக்கிறது. இரும்பு தராசில் உள்ள எடைக்கற்கள் அடிப்பகுதி பெருமளவில் தேய்ந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது. மேலும் கையில் நிறுத்தப்படும் எடைத்தராசில் கம்பிகள் ஆங்காங்கே வளைந்து காணப்படுகிறது. இந்த வகை தராசில் எடைக்கற்கள் வைக்கும் பக்கம் நட்டு, போல்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சில தராசில் பொருட்கள் வைக்கும் பக்கம் அடியில் பெரிய அளவில் அட்டை வைத்து பொருட்களை நிறுத்துக்கின்றனர். தராசின் இருபக்க கூர்பகுதி சரிசமமாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு வகையில் தராசில் குளறுபடி செய்து வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இறைச்சிக்கடையில் பயன்படுத்தும் தராசில் மெகா மோசடி நடந்து வருகிறது. இறைச்சிக்கடையில் உள்ள தராசு, எடைக்கற்கள் எப்போதும் தண்ணீரில் ஊறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்குள்ள எடைக்கற்கள் சீக்கிரம் எடை குறைய வாய்ப்பு அதிகம். ஒரு கிலோ பொருட்களை வாங்கிச்சென்றால், குறைந்தபட்சம் 50 கிராமும், அதிகபட்சம் 200 கிராம் வரையும் பொருட்களின் அளவு குறைகிறது. ஒரு சில வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எடைக்கு மேல் பொருட்களை காண்பித்து, பையில் போடும் ஏதாவது ஒரு வகையில் எடையை ஏமாற்றிவிடுகின்றனர்.

இதேபோல் எலக்ட்ரானிக் தராசில் அளவில் மாற்றம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த வகை தராசில் எடைக்கு ஏற்ப அளவை குறைத்து வைத்துள்ளனர். அரசு உத்தரவுப்படி எந்த வகை தராசாக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர் முத்திரை ஆய்வாளரிடம் தராசு மற்றும் எடைக்கற்களுக்கு முத்திரையிட வேண்டும் என்று உள்ளது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் இதுபோன்ற முத்திரையிடப்படாத எடைக்கற்கள், தராசு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தான் எடையில் ஏமாற்றப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தள்ளுவண்டி, காய்கறிக்கடை, மளிகைக்கடைகளில் உள்ள அனைத்து வகைகயான தராசுக்களை ஆய்வு செய்ய வேண்டும். முத்திரையிடப்படாத தராசு, எடைக்கற்கள் இருந்ததால், அவைகளை உடனடியாக பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: