கோட்டை பெருமாள் கோயிலில் இன்று பஞ்ச கருட சேவை உற்சவம் கோட்டை மைதான நிகழ்ச்சி தவிர்ப்பு

சேலம்: சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் இன்று (25ம்தேதி) காலை பஞ்ச கருட சேவை உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கோயில்களிலேயே பஞ்ச கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் அழகிரிநாதர் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பஞ்ச கருட சேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்நாளில் அம்மாப்பேட்டை பாவநாராயணசுவாமி கோயில் உற்சவர், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் உற்சவர், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் உற்சவர், 2வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோயில் உற்சவர், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் உற்சவர் ஆகிய கோயில்களின் உற்சவர்கள் சந்திக்கும் பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடக்கும்.

நடப்பாண்டு கொரோனா தொற்றால் பொதுவெளியை தவிர்த்து கோயில்களில் பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி நேற்று காலை 9 மணி அம்மாப்பேட்டை பாவநாராயணசுவாமி கோயிலும், 11 மணி செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் பஞ்ச கருட சேவை கொண்டாடப்பட்டது.

மாலை 3 மணிக்கு சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலும், 6 மணிக்கு 2வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோயில் பஞ்சகருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இன்று (25ம் தேதி) காலை 10 மணிக்கு கோட்டை ெபருமாள் கோயிலில் பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி  நடக்கிறது. மாலை 7 மணிக்கு பெருமாள், ஆண்டாள் சீர்வரிசைகளுடன் உள் புறப்பாடும், நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. நாளை (26ம்தேதி) காலை 6 மணிக்கு நீராட்டம், கட்டியம் சேவித்தல், 10.30 மணிக்கு திருக்கல்யாண விசேஷ அலங்காரம், உள்புறப்பாடு, மாலை மாற்றுதல், 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசையுடன் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அழகிரிநாதர் பெருமாளுக்கு சாத்துப்படி செய்தலும், 11.30 மணிக்கு திருக்கல்யாண மஹோத்சவமும், சாற்றுமுறையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ராஜஅலங்காரத்தில் பெருமாள், ஆண்டாள் ஊஞ்சல் உற்சவமும், பாலி விடுதல், ஏகாந்த சேவை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: