துணி காயப்போடுவதில் தகராறுரவுடி கும்பலை கைது செய்யக்கோரி மறியல்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே துணி காயப்போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அடியாட்களை வரவழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். விசைத்தறி தொழிலாளியான இவரது பக்கத்து வீட்டில் கார் மெக்கானிக்கான கஜபதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், துணிகளை காயப்போடுவது தொடர்பாக மணிகண்டன் மனைவி ராஜேஸ்வரிக்கும், கஜபதியின் மனைவி தேவிக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதுகுறித்து வெப்படை காவல்நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகாரளித்தனர். கஜபதி மனைவி தேவி கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், ராஜேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கஜபதி, அவரது மனைவி தேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளதாக மணிகண்டன் தரப்பினர் வெப்படை 4 சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் சுமார் ஒரு மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: