மூணாறு அருகே வனவிலங்குகளால் காய்கறி சாகுபடி நாசம் வட்டவடை பஞ்சாயத்து விவசாயிகள் கவலை

மூணாறு:  மூணாறு அருகே, வட்டவடை பஞ்சாயத்தில் வனவிலங்குகள், தண்ணீர் பற்றாக்குறையால் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து 45 கி.மீ தொலைவில் வட்டவடை பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் குளிர்கால காய்கறிகளான பீன்ஸ், பட்டர் பீன்ஸ், முட்டைக் கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவை ஏக்கர் கணக்கில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வட்டவடை பஞ்சாயத்தில் வஞ்சிமலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், பட்டாணி ஆகியவற்றை காட்டெருமைகள் நாசம் செய்துள்ளன. குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் சாகுபடியை அதிகமாக நாசம் செய்துள்ளது. மேலும், பஞ்சாயத்தில் உள்ள சிலந்தியார், கொட்டக்கம்பூர், வட்டவடை பகுதிகளில் காய்கறி சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவை கருகத் தொடங்கியுள்ளன. சந்தைகளில் நியாயமான விலை கிடைத்ததால், இந்தாண்டு விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டனர். தண்ணீர் பற்றாக்குறையால் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக நெடுமார்ப்பு, கூடலார்குடி ஆகிய பகுதிகளில்  தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணி தொடங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: