மழை வளத்தை பெருக்க மரங்கள் நடவேண்டும் பண்ணைப்புரம் விவசாயிகள் கோரிக்கை

தேவாரம்: பண்ணைப்புரம் பகுதியில் மழை வளத்தை பெருக்க, மரங்களை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் இயற்கையிலேயே மழை மறைவு பிரதேசமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், மழை காலங்களில் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியவில்லை. இதனால், நிலத்தடி நீர் உயருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பண்ணைப்புரம் பகுதியில் மழை வளத்தை பெருக்க ஆல், வேம்பு, புங்கன், அரசு மரங்கள் ஆகிய மரங்களை கண்மாய்கள், பொது இடங்கள், தோட்டங்கள்,  மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் நட்டு, அவைகள பராமரிக்க தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம். இதற்கான ஆலோசனைகளை வழங்க மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘பண்ணைப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் மழை வளத்தை பெருக்க மரங்களை நடவேண்டும்’ என்றனர்.

Related Stories: