பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் ராமசாமி, நேதாஜிசேகர், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திரபோராட்ட தியாகிகளான வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய அலங்கார வாகனங்களை புறக்கணித்த ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

தேனி கலெக்டர் அலுவலகம் முன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா குழு உறுப்பினர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தின்போது, ‘கெங்குவார்பட்டி பகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனையடுத்து கோரிக்கை மனுக்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தனி மனுக்களாக கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேதாஜி பிறந்த நாள் விழா: கம்பம் காந்தி சிலை அருகே, தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் விழா, மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வம் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ் முன்னிலையில், கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுமக்களுக்கு 125 இலவச மரக்கன்றுகள், முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கினர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித், மாநில இளைஞர் அணி செயலாளர் தனபால், மாநில தொண்டர் அணி பொதுச்செயலாளர் செல்வகுமார், மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் கணபதி, இளைஞரணி செயலாளர் பால்ராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுதாகர், கம்பம் நகர தலைவர் திரவியம், செயலாளர் முத்துசாமி, ஸ்டாலின், சின்னமனூர் நகர செயலாளர் முத்துச்செல்வம், கூடலூர் நகர செயலாளர் ராமர் மற்றும்  இளைஞரணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: