×

ஊராட்சி மன்றங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் பொது நிதி வழங்க வேண்டும்

மன்னார்குடி, ஜன.25: ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் பொது நிதி அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் மன்னை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரேசன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவர்கண்டநல்லூர் ரவி, கமலாபுரம் பிரபாவதி அமர்நாத், குடவாசல் மாலதி அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் பொது நிதி அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும். ஊராட்சி கணக்கு எண் 2ல் பல ஊராட்சிகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை உபரி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை 3ம் கணக்கான திட்டக்கணக்கில் மாற்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு குறித்தான முழு அதிகாரமும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவாரூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்ட தலைவராக ஊர்குடி ஊராட்சி தலைவர் செல்லத்துரை, செய லாளராக வைப்பூர் ஊராட்சி தலைவர் பாவாடைராயன், பொருளாளராக கோட்டூர் ஊராட்சி தலைவர் ஆனந்தன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மணக்கரை ஊராட்சி தலைவர் செல்வகணபதி வரவேற்றார். மூங்கில்குடி ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்