×

கொள்ளிடம் ஆற்றில் 2வது பம்ப் ஹவுஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

தஞ்சை,ஜன.25: கொள்ளிடம் ஆற்றில் 2வது பம்ப் ஹவுஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை சேர்ப்பித்து வருகின்றனர்.

நேற்று தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் திருச்சினம்பூண்டியை சேர்ந்த கிராம பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் ஊராட்சிக்கு எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒரு பெரிய நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிமிடத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த கொள்ளிடம் ஆற்றில் மூன்று முறை மணல் குவாரி அமைத்து இங்கிருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் 15 அடி பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கைப் பம்புகள், விவசாய மோட்டார்கள் நீரின்றி மீண்டும் 60 அடி முதல் 100 அடி ஆழம் வரை சென்றதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான காய்ப்பு மரங்கள் பட்டு போய்விட்டன.

கொள்ளிடம் ஆறு இரண்டுமுறை நீரின்றி வறண்டு மீன் வளமும் அழிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு காலப் கட்டத்தில் குவாரி மற்றும் மற்றொரு பம்ப் ஹவுஸ் அமைக்க அரசு மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் மீண்டும் பம்ப் ஹவுஸ் அமைக்க போர்வெல் போட்டு வருகின்றனர். இந்த இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டால் எங்கள் வளமான பகுதி நிச்சயம் பாதித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Kollidam river ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம்...