×

ஊரங்கு தடைகளுக்கு பின் 13 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறப்பு

பெரம்பலூர்,ஜன.25: பண்டிகை, ஊரடங்கு தடைகள் எதிரொலியாக 13 நாட்களுக்கு பிறகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் குவிந்தனர். பெரம்பலூர்அருகே சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோயில் கண்ணகியின் சினம் தணித்த தலமாகக் கருதப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான இக்கோயில் வாரத்தின் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே திறக்கப்படும்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை சமயத்தில், 14,15,16,17,18 தேதிகளில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 10ம்தேதி (திங்கட்கிழமை) நடை திறக்கப்பட்ட சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், கொரோனா தடைஉத்தரவு, பண்டிகைக் கால தடை உத்தரவுகளை கடந்து 13 நாட்களுக்கு பிறகு நேற்று (24ம்தேதி) திறக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிறுவாச்சூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, அரியலூர், தஞ்சை, கடலூர், சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து மதுரகாளியம்மனை பக்தியுடன் தரிசித்துவிட்டுச் சென்றனர். கோயில் செயல் அலுவலர் அருண் பாண்டியன் உத்தரவின்பேரில் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா