×

குடியரசு தினவிழாவையொட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

பெரம்பலூர்,ஜன.25: 73வது குடியரசு தினவிழா நாளை (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 பிளட்டோன் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அணி வகுப்புக்கு ஒத்திகை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாளை (26ம் தேதி) எளிமையாகக் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சு மாதம் 25ம் தேதி முதல் கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னமும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட வில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவில், குடியரசு தின விழாக்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. கொடியேற்றம் அணி வகுப்பு, தியாகிகள் கவுரவிப்பு, அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகளோடு முடிவடைந்தன. அதேபோல் இந்தாண்டு குடியரசு தின விழாவும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இன்றி, பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி நடைபெற உள்ளது.

இதனையொட்டி குடியரசு தினவிழாவில் நடைபெறும் போலீசாரின் அணி வகுப்புக்கான ஒத்திகை நேற்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பராமன் ஆகியோரது முன்னிலையில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் நடந்த அணிவகுப்பு ஒத்திகையில் தலா 21 போலீசார் கொண்ட 3 பிளட்டோன் போலீசார், 1 பிளட்டோன் ஊர்க்காவல் படையினர் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள், காவல் துறையின் இசைக்குழுவினர் உள்ளிட்ட 102 பேர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று 3வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நடைபெறவுள்ள நாட்டின் 73வது குடியரசுதின விழாவை முன்னிட்டு விழா நடைபெறக்கூடிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையிலுள்ளது. இனி நகராட்சி தூய்மைப்பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பைணிகள் இன்று (25ம்தேதி) நடைபெறவுள்ளது.

Tags : Republic Day ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!