ஏரிக்குள் கட்டியதால் தண்ணீரில் மிதக்கும் பாலவேடு: சுடுகாடு சாலையில் சடலத்தை எரிக்கும் அவலம்

ஆவடி:ஆவடி அடுத்த பாலவேடு ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் பாலவேடு, பாலவேடு பேட்டை, சாஸ்திரி நகர், மேலப்பேடு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு பாலவேடு ஏரிக்கரையில், பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

கடந்த 2014ம் ஆண்டு வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது ஏரிக்கரை ஓரம் இருந்த சுடுகாடு அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, அந்த சுடுகாடு பாலவேடு ஏரிக்குள்ளே புதிதாக கட்டப்பட்டது. இதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பெய்து வரும் பருவ மழையில் ஏரி நீர் நிரம்பி வழியும். அப்போதெல்லாம் சுடுகாடு தண்ணீரில் மிதக்கும் அவலநிலையில் உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலங்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சுடுகாடு தண்ணீரில் மிதக்கும் போதெல்லாம், மக்கள் 400 அடி சாலை ஓரமாக சடலங்களை எரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த அதிமுக ஆட்சியில் கலெக்டர், ஆவடி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்தனர். கடந்த பருவமழையில் ஏரி நிறைந்து, தற்போது சுடுகாடு தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாலவேடு கிராமத்தைச் சேர்ந்த குமரவேல்(55), உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை சுடுகாட்டில் எரிக்க முடியாமல் உறவினர்கள் அவதிப்பட்டனர். இதனையடுத்து, உறவினர்கள் சடலத்தை 400 அடி சாலை ஓரமாக தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் அவதி: சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `பாலவேடு ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு ஏரிக்குள் கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சுடுகாட்டில் சடலங்களை எரிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் சடலத்தை சாலையில் போட்டு எரித்து விட்டு செல்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏரிக்குள் இருக்கும் சுடுகாட்டை அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் சுடுகாடு கட்டித் தரவேண்டும்’ என்றனர்.

Related Stories: