×

வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்


திட்டக்குடி, ஜன. 25:   திட்டக்குடி அடுத்துள்ள தர்மக்குடிக்காடு மெயின் ரோடு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தொடர்ந்து அருந்தியர் மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை சம்மந்தபட்ட இடத்திற்கு எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கப்படவில்லை.

 இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் நேற்று ஆக்கிரமிப்பு செய்து அதில் தகர சீட் கொட்டகை அமைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி அருந்ததியர் மக்கள் அந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சம்பந்தப்பட்ட இடத்தில் கொட்டகை அமைத்து பெண்கள் சமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், திட்டக்குடி டிஎஸ்பி சிவா, நகராட்சி ஆணையர் ஆண்டவர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நீதிமன்றம் ஆணைக்கிணங்க எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் இந்த பிரச்னை குறித்து தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...