×

விருத்தாசலம் அருகே நூறுநாள் வேலை அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு

விருத்தாசலம், ஜன. 25: விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலைத்திட்ட பணியின், சமூக தணிக்கை கடந்த ஒருவாரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெறுவதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து காலை கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு தயாராக இருந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது பொதுமக்கள் பலருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை. ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் பலருக்கு வழங்கவில்லை. ஒருதலைப்பட்சமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. பல மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் வழங்காததால் எங்களுக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை வேண்டாம் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயகுமார் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டவுடன் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துவிட்டு பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு