×

கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியல்


வேப்பூர், ஜன. 25:       வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது சொந்த கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மாயனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் கணேசன் (42) என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். கணேசனுக்கு அவரது முதலாளி நாகராஜிக்கும் இடையே சம்பள பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு 12 மணியளவில் கோழி பண்ணையில் இருந்த கணேசன் உயிரிழந்ததாக கோழிப்பண்ணை உரிமையாளர் நாகராஜ், கணேசன் மகன் சந்துருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சந்துரு தனது தந்தை கணேசன் பிரேதத்தை பார்த்துவிட்டு தனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக நேற்றுமுன்தினம் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கணேசன் சாவுக்கு காரணமான கோழிப்பண்ணை உரிமையாளர் நாகராஜனை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் கணேசன் உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வேப்பூர் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி சிவா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை முடிவு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர் அதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Marmasavu ,
× RELATED வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு...