6 மாதத்திற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் போட்டியிட தடை மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்

வேலூர், ஜன.25: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 6 மாதத்திற்கு மேல் தண்டனை பெற்றிருப்பின் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி எந்த ேநரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்கள் தொடர்பான கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், வேட்பாளர் எந்த பேரூராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினராக மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புகின்றார்களோ அந்த உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் ஏதாவது ஒரு வார்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டால் அந்த பதவி எந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த பிரிவினராகவும் அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் பெண்ணாகவும் இருத்தல் வேண்டும். ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை பெற்றிருப்பின், தண்டனை காலத்திலும், தண்டனை முடிவடைந்த நாளில் இருந்து ஆறு ஆண்டு காலத்திற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர். தேர்தல் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனைபெற்ற நாளில் இருந்து ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியில்லை. மனநலம் குன்றியவர், பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்தவர், நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டவர் போட்டியிட தகுதியில்லை. போட்டியிட விரும்புகின்ற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்குதாரர் மூலமாக எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வாங்க ஒப்பந்ததாரராக இருக்க கூடாது.

சம்பந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சியை சேர்ந்த வழக்கறிஞர், வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் அந்த உள்ளாட்சி சார்பில் ஆஜராக அல்லது எதிராக வழக்காடுபவராக இருத்தல் கூடாது. அரசு பணியாளர் அல்லது அலுவலராக இருக்கக்கூடாது. நகர்புற உள்ளாட்சிக்கு சேர வேண்டிய தொகைகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்க கூடாது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இயலாத தகுதியின்மை ஏதும் பெற்றிருத்தல் கூடாது. உள்ளாட்சி தேர்தலில் இதற்குமுன் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கை உரிய முறைப்படி உரிய காலத்தில் தாக்கல் செய்ய தவறியமைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்டவராக இருப்பின் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் ஏதாவது ஒரு வார்டு உறுப்பினர் பதவியை மட்டுமே வகிக்க இயலும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: