வாலிபரிடம் ஆன்லைனில் ₹1.33 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் ₹23 ஆயிரம் மீட்டனர் கார் விற்பதாக பேஸ்புக்கில் விளம்பரம் பதிவிட்டு

வேலூர், ஜன.25: கார் விற்பதாக பேஸ்புக்கில் விளம்பரம் பதிவிட்டு, பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்ட ₹1.33 லட்சத்தில் ₹23 ஆயிரத்தை வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டு வழங்கினர். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திலிப்குமார்(32). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் கார் விற்பனை செய்வதாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து திலிப்குமார் அந்த விளம்பரத்தை பதிவிட்ட வடமாநில நபரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து கார் வாங்குவதற்காக ₹1.33 லட்சம் முன்பணமாக ஆன்லைனில் அனுப்பினாராம். தொடர்ந்து, வடமாநில நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அந்த நம்பர் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த திலிப்குமார் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் எஸ்ஐ சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக திலிப்குமார் பணம் செலுத்திய வங்கி கணக்கை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து திலிப்குமாரின் ₹23 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். இந்நிலையில் நேற்று சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி பணத்தை இழந்த திலிப்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தார். இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் வரும் விளம்பரங்களை நம்பி யாரும் பணம் இழக்க வேண்டாம். சமூக வலைத்தளத்தில் வரும் பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை கடைகளில் வாங்கலாம்’ என்றனர்.

Related Stories: