மாடு விடும் விழாவில் விதிமீறினால் 5 ஆண்டுகளுக்கு தடை ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எச்சரிக்கை வேலூர் மாவட்டத்துக்கு மீண்டும் அனுமதி

வேலூர், ஜன.25: வேலூர் மாவட்டத்தில் மாடுவிடும் திருவிழா நடத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறினால் 5 ஆண்டுக்கு தடை விதிக்கப்படும் என்று ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் மிட்டல் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ ராமமூர்த்தி, எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்குழு உறுப்பினர் மிட்டல் பங்கேற்று எருது விடும் விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனைக்கு பிறகு மிட்டல் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இந்த துணிச்சலான முடிவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டும். மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாலியாக மாடு விடும் விழா காண வருகிறீர்கள். ஆனால், ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகமாக செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து மாடு விடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. 6 தாலுகாக்கள் மட்டுமே உள்ள வேலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட எருதுவிடும் விழாக்கள் நடைபெறுகிறது. கவுரவ பிரச்னையை காரணம் காட்டி விழாக்களை அதிகரித்தால் எதிர்காலத்தில் வீடுதோறும் எருது விடும் விழா நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு வருவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை முறைப்படுத்தி படிப்படியாக குறைக்க வேண்டும். ஒரே கிராமத்தில் நடைபெறும் பல்வேறு எருது விடும் விழாக்களை ஒருங்கிணைத்து ஒரே நிகழ்ச்சியாக நடத்தினால் மிகவும் சிறப்பாக விழா நடைபெறும். எருதுவிடும் விழாக்களில் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் உச்சநீதிமன்ற உதவியுடன் இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இதுபோன்ற மாடு விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: நமது மாவட்டத்தில் சில விதிமீறல்கள் இருந்ததால், எருதுவிடும் விழாக்கள் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிகழ்விலும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கிராமங்களில் நிரந்தரமாக எருதுவிடும் விழாக்கள் நடத்த தடை செய்யப்படும். காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரடியாக ஆய்வு செய்த பின்னரே எருதுவிடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். வருங்காலத்தில் விதிகளை மீறும் கிராமங்களில் எருதுவிடும் நிகழ்வுகள் நடக்காது என எச்சரித்துள்ளோம். விதிகளை மீறுபவர்களுக்கு கட்டாயம் வருங்காலங்களில் அனுமதி வழங்கப்படாது. கம்மவான்பேட்டையில் விதிகளுக்குட்பட்டு மாடுவிடும் விழாவுக்கு அனுமதி அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: