×

வாடகைக்கு வீடு உள்ளதாக விளம்பரம் செய்தவரிடம் ராணுவ வீரர் போல் நடித்து ரூ.1 லட்சம் நூதன மோசடி: ஆசாமிக்கு வலை

அண்ணாநகர்: வாடகைக்கு வீடு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தவரிடம், ராணுவ வீரர் போல் நடித்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர், சோமநாதபுரம், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜித்தேந்தர் (31). ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், அயனாவரம் தலைமை செயலக காலனியில் உள்ள தனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதற்காக, இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஜித்தேந்தரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை ராணுவ தொழில் பாதுகாப்பு படை வீரர்  என கூறிக்கொண்டு, நான் டெல்லியில் வேலை செய்து வருகிறேன். விரைவில் பதவி உயர்வு பெற்று, சென்னை விமான நிலையத்தில் பணிபுரிய உள்ளேன்.

சென்னையில் தங்குவதற்கு எனக்கு வாடகைக்கு வீடு தேவைப்படுகிறது. இணையதளத்தில் உங்களது விளம்பரத்தை பார்த்தேன். உங்கள் வீடு பற்றிய விவரங்களை கூறுங்கள், என கேட்டுள்ளார். அவருக்கு, ஜித்தேந்தர் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த நபர், எனக்கு வீடு பிடித்துவிட்டது. விரைவில் உங்களை தொடர்பு கொண்டு, முன்பணம் தருகிறேன், என தெரிவித்துள்ளார். அதற்கு ஜித்தேந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர், ஜித்தேந்தர் வாட்ஸ்அப் எண்ணில், அந்த நபர் தனது ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அனுப்பி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மீண்டும் ஜித்தேந்தரை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த நபர், ‘சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவர், எனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டியுள்ளது. அதை வாங்கி, உங்களது வீட்டிற்கான முன்பணத்தை கொடுத்து விடுகிறேன்.   

மேலும், டெல்லியில் இருந்து உடனடியாக எனது உடமைகளை எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட வேண்டியுள்ளதால், அவசரமாக ரூ.1 லட்சம் தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து அந்த தொகையை கொடுத்தால், சென்னை வந்தவுடன் அந்த பணத்தையும் சேர்த்து கொடுத்து விடுகிறேன்,’ என கூறியுள்ளார். வாடகைக்கு வீடு கேட்பவர் ராணுவ வீரர் என்பதால், ஜித்தேந்தர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். அதன்பிறகு ஜிதேந்தர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது, செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.  

இதுபற்றி ஜித்தேந்தர் அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அந்த நபர் அனுப்பிய அடையாள அட்டை போலி என்பதும், ரூ.1 லட்சத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், ‘‘சமீப காலமாக ராணுவ வீரர் எனக்கூறி பலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், என பலமுறை விழிப்புணர்வு செய்தாலும், பலர் தொடர்ந்து பணத்தை இழந்து வருகின்றனர். ராணுவ வீரர்  என்று சொன்னவுடன் பலர் நம்பி, பணத்தை கொடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் கும்பலை தேடி வருகிறோம்,’’ என்றனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...