பிரபல ரெஸ்டாரன்டில் சிக்கன் சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து பலி: பெற்றோர் போலீசில் புகார்; வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: பிரபல ரெஸ்டாரன்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட வாலிபர், வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாசர்பாடி, ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (22). பி.எஸ்.சி. விஷூவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, குறும்பட இயக்குனர்களிடம் கேமராமேனாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, பெரம்பூர் பி.பி.சாலையில் உள்ள தனது நண்பர் கிரிதரன் பணிபுரியும் மருந்தகத்திற்கு சென்றார். அங்கு, கிரிதரன், ரஞ்சித் ஆகிய இருவரும், தங்களது நண்பர்களான சூரியா, விக்னேஷ் ஆகியோரை வரவழைத்துள்ளனர்.

பின்னர், இவர்கள் உணவு டெலிவரி மொபைல் ஆப் மூலம், பிரபல சிக்கன் ரெஸ்டாரன்டில், சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு சிக்கன் வந்து சேர்ந்தது. அதை, கடையில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, ரஞ்சித் மட்டும் குளிர்பானம் குடித்துள்ளார். பின்னர், அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். வழியில் ரஞ்சித், ‘தனக்கு வயிறு மற்றும் இடது பக்க கை வலிக்கிறது,’ என தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ரஞ்சித்தை வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இரவு 10 மணியளவில் மீண்டும் தனக்கு உடலின் இடது பக்கம் முழுவதும் வலிப்பதாக ரஞ்சித் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் விக்னேஷ், உடனடியாக ரஞ்சித்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, ரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், பிரபல ரெஸ்டாரன்ட்டில் சிக்கன் சாப்பிட்டதால் தான் ரஞ்சித் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை  அறிக்கை வந்தபிறகுதான் ரஞ்சித் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல ரெஸ்டாரன்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: