பக்கத்து வீட்டு பெண் திட்டியதால் பள்ளி மாணவி திடீர் தற்கொலை: கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

குன்றத்தூர், ஜன.24: குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா(40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு வைஷ்ணவி(13) என்ற மகளும், நவீன்(8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி, கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தாள். இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். நவீன், விளையாட வெளியே சென்று விட்டான். வீட்டில் வைஷ்ணவி மட்டும் தனியாக இருந்தாள். நவீன், விளையாடி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது, அங்கு வைஷ்ணவி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினான்.  அக்கம்பக்கத்தினர் வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைஷ்ணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வைஷ்ணவி குடியிருக்கும் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இளம்பெண், வாலிபருடன் அடிக்கடி சந்தித்து ரகசியமாக பேசி வந்தார். இதனைக் கண்ட வைஷ்ணவி, குடியிருப்பு வாசிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபரின் பெற்றோர், வைஷ்ணவியை கண்டித்ததுடன், அவரது பெற்றோர் வந்தால் சொல்லுவதாக கூறினர். இதனால் அச்சமடைந்த வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் தன்னை அந்த வீட்டில் இருந்த அக்கா திட்டியதாகவும் அவரது நோட்டில் கைப்பட எழுதி இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி மேலும் விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமம் இரட்டைமலை சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ஜேக்கப்(60). இவரது மகள் சங்கீதா, செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரை காதலிப்பதாக கூறியதால் இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனன்யா (3), சாமுவேல் (1) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சங்கீதாவுக்கும், சுந்தரத்திற்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 22ம் தேதி சங்கீதாவின் தம்பி பிரபுவுக்கு போன் செய்த சுந்தரம் உன்னுடைய அக்கா சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறினார். ேஜக்கப், சகோதரர் பிரபு ஆகியோர் சென்று பார்த்தபோது கட்டிலில் படுத்த நிலையில் சங்கீதா சடலமாக கிடந்தார். புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுந்தரம், அவரது தந்தை மணி ஆகியோரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: