×

திருவாரூர் மாவட்டத்தில் 3வது வாரமான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் 15 ஆயிரம் கடைகள் அடைப்பு

திருவாரூர், ஜன.24: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3வது வாரமான ஞாயிறு முழு ஊரடங்கினையொட்டி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதுடன் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து துவங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் 3ம் அலை காரணமாக தமிழகத்தில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6ம் தேதி முதல் ஒரு சில கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்களில் 50 சதவீத அளவில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்பதுடன் திருமண நிகழ்ச்சிக்கு 100 பேரும், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு 50 பேர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், பால் விற்பனை, பெட்ரோல் பங்க்குகள் போன்றவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியில் நடமாடும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நாளில் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, பத்திரிக்கை விநியோகம் தவிர பிற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி நேற்று 3வது வாரமாக இந்த முழு ஊரடங்கினையொட்டி பொதுமக்கள் தங்களுக்கான காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நேற்று முன் தினமே வாங்குவதற்காக மாநிலம் முழுவதும் கடைவீதிகளில் குவிந்தனர். இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் கடைத்தெரு பகுதியில் இயங்கி வரும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் நகர் முழுவதும் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கினர். மேலும் இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் இருந்து வரும் சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அரசின் உத்தரவுப்படி நேற்று முழுவதுமாக அடைக்கப்பட்டதன் காரணமாகவும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார், வேன், லாரி உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் சாலையில் இயங்காததன் காரணமாகவும் திருவாரூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பஸ் நிலையம், கடைத்தெரு, நேதாஜி சாலை, தெற்கு வீதி, கீழவீதி, மேல வீதி, கமலாலயம் வடகரை உள்ளிட்ட சாலைகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதுமட்டுமின்றி வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதன் காரணமாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் பூட்டப்பட்டிருந்ததால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அரசின் உத்தரவை மீறி டூ வீலர் மூலம் வெளியில் நடமாடிய ஒரு சில நபர்களையும் போலீசார் மடக்கி நிறுத்தி அபராதம் விதித்ததுடன் இதுபோன்று அரசின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவது குற்றம் எனவும், கொரோனா தொற்று ஏற்பட்டால் குடும்பமே பாதிக்கப்படுவதுடன் பொருளாதார இழப்பும் ஏற்படும் எனவும் எனவே இதுபோன்று முழு ஊரடங்கின் போது வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தனர்.

மன்னார்குடி: மன்னார்குடியில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு கிடந்தன. மன்னார்குடி நகர சாலைகள் வாகன போக்குவரத்தின்றி அமைதியாக காணப்பட்டது. மேலும், டிஎஸ்பி பாலச்சந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந் தவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கையொட்டி மக்கள் தேவையின்றி வெளியே வரவில்லை. அதேபோல் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பெரியக்கடைதெரு, பட்டுக்கோட்டை சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, மன்னார்குடி சாலை, வேதாரண்யம் சாலை உட்பட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Thiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி...