கழுகூர் பிள்ளைகோடங்கிபட்டியில் மயான சாலை வசதி தாசில்தார் நேரில் ஆய்வு

தோகைமலை, ஜன.24: தோகைமலை அருகே பிள்ளைகோடங்கிபட்டியில் வசிக்கும் பொதுமக்களின் மயான காட்டிற்கு சாலை வசதி அமைத்து தருவதோடு நிரந்தமான மயான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் குளித்தலை தாசில்தார் வெங்கடேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி பிள்ளைகோடங்கிபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிக்கான மயானம் அருகில் உள்ள கன்னிமார்பாளையம் பகுதியில் இருந்து கழுகூர் பெரிய ஏரிக்கு செல்லும் ஆற்றுவாரி வழியாக சுமார் 1 கிமீ தொலைவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இதனையடுத்து இறந்தவர்களின் உடலை பிள்ளைகோடங்கிபட்டியில் இருந்து கழுகூர் பெரிய ஏரியின் ஆற்றுவாரி வழியாக எடுத்து சென்று வருகின்றனர். இதனால் மழை காலங்களில் கன்னிமார்பாளையம் பகுதியில் இருந்து கழுகூர் பெரிய ஏரிக்கு வெள்ளநீர் செல்லும் என்று இப்பகுதியினர் கூறுகின்றனர். அப்போது இறந்தவரின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்து வந்தனர்.

மேலும் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் மயானம் அமைந்துள்ளதால் உடல்களை புதைப்பதற்கு இடத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினர். இதனால் இறந்தவரின் உடலை மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஆற்றுவாரி வழியாக 1 கி.மீ தூரம் எடுத்து சென்று புதைக்க சென்றால், இடத்தின் உரிமையாளரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலை தொடர் கதையாகி வருவது இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினர். இதனையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் நேற்று குளித்தலை தாசில்தார் வெங்கடேஸ்வரன், பிள்ளைகோடங்கிபட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தற்போது அமைந்துள்ள மயானம், அதற்கான சாலை, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்படும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த அறிக்கையை கலெக்டருக்கு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது கழுகூர் ஊராட்சி தலைவர் முத்துச்சாமி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிசிக்குமார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் உள்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories: