×

முழு ஊரடங்கும்.. போலீசார் பாதுகாப்பும்...

சிதம்பரம்,ஜன. 24:  சிதம்பரம் பகுதியில் நேற்று 3வது வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் சிதம்பரம் பஸ் நிலையம் வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளான மேலவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய கடைகளும் திறக்கப்படவில்லை. சிதம்பரம் நகரில் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றபடி தீவிரமாக கண்காணித்தனர். சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து அந்த வழியாக அத்தியாவசிய பணிகளுக்கு வந்தவர்களை சோதனையிட்டு அனுப்பி வைத்தனர். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, மருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பரபரப்பாக காணப்பட்ட நான்குமுனை சந்திப்பு: மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதன் பணிமனைகளில் முடங்கின. மக்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை வேறு வழியின்றி நேற்று நடத்தினர். இதனால், திருமண வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என நேற்று காலை முதலே பனியையும் பொருட்படுத்தாமல்  இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் திருமணங்களுக்கு சென்றனர். இதனால், வடலூர் நான்கு முனை சந்திப்பு பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதிகளிலும் ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டதால் மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களில் திருமணங்களில் பங்கேற்றனர். தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம்:சேத்தியாத்தோப்பு முக்கிய வீதிகளிலும் சென்னை- கும்பகோணம் மற்றும் விருத்தாசலம்- புவனகிரி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் கார் மற்றும் வேனில் அதிக  பயணித்த நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.


Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ