முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. ஒமிக்ரான் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தினமும் இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு காரணமாக கடலூர் முழுவதும் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், கடலூர் திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட் கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. கடலூர் பாரதி சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பால்  கடைகள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்டவை திறந்திருந்தன. பஸ், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை.

எனினும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமணம் முடிந்து நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோ மற்றும் கார்களில் வந்தவர்கள், போலீசாரிடம் திருமண பத்திரிகைகளை காண்பித்து சென்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் மீன்பிடிதளம் வெறிச்சோடி காணப்பட்டது.  மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அவைகள் மூடப்பட்டிருந்தன.இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 54 சோதனை சாவடிகள் அமைத்து 1500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: