×

குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம், ஜன. 24:  நெல்லிக்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் காலை, மாலை என இருவேளையும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லிக்குப்பம் விநாயகர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், குடிநீர் குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த நகராட்சி பணியாளர்கள், உடனடியாக அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். பின்னர் அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால், உடைப்பு ஏற்பட்ட பைப்பை அகற்றிவிட்டு, பிளாஸ்டிக் பைப்பை கொண்டு உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து குழாய் இணைப்பில் இருந்து ராமு வீதிக்கு செல்லும் பைப்பில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.மேலும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் மூடப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் கசிவை சரி செய்து, பள்ளத்தை மூடி முறையாக குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது