குமரியில் சிறுவனை ெகான்று பீரோவில் மறைப்பு முகத்தை தலையணையால் அமுக்கி ஏறி அமர்ந்து கொன்றேன் கைதான கொடூர பெண்ணின் பகீர் வாக்குமூலம்

குளச்சல், ஜன.24 :  குமரியில் நகைக்கு ஆசைப்பட்டு 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் அடைத்த சம்பவத்தில் கைதான பெண் அளித்துள்ள வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜாண் ரிச்சர்டு. மீன்பிடி தொழிலாளி. சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களுக்கு ஜோகன் ரிஜி (4) என்ற மகனும், 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 21ம் தேதி மதியம், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் ரிஜியை காணவில்லை. இது குறித்து சகாய சில்ஜா, மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜோகன் ரிஜி 1 பவுன் தங்க செயினும், அரை பவுன் பிரேஸ்லெட் மற்றும் வெள்ளி அரைஞான் கயிறும் அணிந்திருந்தான். எனவே நகைக்கு ஆசைப்பட்டு கடத்தி இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர்.

சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த தெருவில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சிலர், அதே தெருவில் வசிக்கும் ஷரோபின் என்பவரது மனைவி பாத்திமா (35) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் கூறினர். இதனால் போலீசார் பாத்திமாவை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பாத்திமா, தங்க நகைகளை அடகு வைத்து வாணியக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவர் அடகு வைத்த தனியார் வங்கிக்கு சென்று விசாரித்ததில், அந்த நகைகள் சிறுவன் ஜோகன் ரிஜி அணிந்திருந்தவை என்பது தெரிய வந்தது. இதனால் பாத்திமாவை பிடித்து விசாரிக்கையில், ஒன்றரை பவுன் நகைக்காக ஜோகன் ரிஜியை கொன்று நகைகளை திருடியதாகவும், உடலை துணியில் சுற்றி பீரோவில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே சிறுவன் ஜோகன் ரிஜி உடல் இருந்தது. இதை பார்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த பாத்திமாவையும், அவரது கணவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த கொலை தொடர்பான விசாரணைக்கு பின் பாத்திமாவை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது : எனது கணவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இரு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் குடும்ப தேவைக்காக அக்கம் பக்கத்திலும், தெரிந்த நபர்களிடமும் கடன் வாங்கினேன். இந்த கடனை முறையாக செலுத்த முடிய வில்லை. ஏற்கனவே என் மீது நகை மோசடி வழக்கும் காவல் நிலையத்தில் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதில் வாணியக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும். 21ம் தேதிக்குள் பணம் தரா விட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறினார். பலரிடம் கேட்டும் பணம் கிடைக்க வில்லை. இந்த நிலையில் தான் அன்று மதியம் ஜோகன் ரிஜி எங்கள் வீட்டு அருகில் விளையாடியதை பார்த்தேன். எப்போதும் அவன் கை, கழுத்தில் நகை அணிந்திருப்பான். என்னிடம் நன்றாக பழகுவான்.

நான் அவனை வீட்டுக்கு அழைத்ததும் வந்தான். அவனை மடியில் உட்கார வைத்து கொஞ்சியவாறு நைசாக கழுத்தில் உள்ள செயினை அறுக்க முயன்றேன். அவன் அழுது விட்டு செல்ல முயன்றான். தொடர்ந்து கூச்சல் போடக்கூடாது என்பதற்காக துணியால் வாயை கட்டினேன். பின்னர் கை, கால்களையும் கட்டி கழுத்தை நெரித்தேன். பின்னர் கீழே படுக்க வைத்து தலையணையை முகத்தில் வைத்து அமுக்கி அவன் மீது நான் ஏறி அமர்ந்தேன். இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்தான். பின்னர் நகைகளை கழற்றினேன். எனது குழந்தைகள் பார்த்துவிட்டால்  வெளியே கூறி விடுவார்கள் என பயந்து, துணியால் உடலை சுற்றி பீரோவுக்குள் வைத்து பூட்டி விட்டு சாவியை நானே வைத்துக் கொண்டேன்.

இதற்கிடையே ஜோகன் ரிஜியை காணாமல் தேட தொடங்கினர். நானும் எதுவும் தெரியாதது போல் தேடினேன். இரவு வரை தேடிய நான், பின்னர் எனது கணவர் வந்ததும் அவரிடம் இது குறித்து கூறினேன். என்னை கண்டித்த அவர், வெளியே தெரியாமல் இருக்க உடலை கடலுக்குள் வீசி விடலாம் என்றார். நானும் சம்மதித்தேன். ஆனால் விடிய, விடிய ஆள் நடமாட்டம் இருந்ததால் எங்களால் உடலை கொண்டு செல்ல முடிய வில்லை. இதற்கிடையே நான் நகையை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வாணியக்குடியை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்தேன். அவருக்கு சிறுவனை கொன்று  நகையை திருடியது தெரியாது. அவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.20 ஆயிரத்தை இரு வாரங்களில் தந்து விடுகிறேன் என கூறி விட்டு வந்தேன். ஆனால் நான் வங்கிக்கு சென்று நகையை அடகு வைத்து திடீரென ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்த தகவல் காவல் துறையினருக்கு தெரிய வர சிக்கிக் கொண்டேன். பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: