மகப்பேறு மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்

திருப்பூர், ஜன. 22:  திருப்பூரில் மகப்பேறு மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து புதுராமகிருஷ்ண புரம் பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பூர், புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் மாநகராட்சி எல்.ஆர்.ஜி.ஆர் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் பிரசவமும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையை தற்போது கொரோனா வார்டாக மாற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொரோனா வார்டாக மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி அப்பகுதியில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் மற்றும், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: