கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை சரிவு

ஊட்டி,ஜன.22:  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனால் ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா, பூங்கா,குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா,தேயிலை பூங்கா,மரவியல் பூங்கா போன்றவைகளும், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள தொட்டபெட்டா,பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சூட்டிங்மட்டம், கேர்ன்ஹில், கோடநாடு காட்சிமுனை, முதுமலை உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கொரோனா இரண்டாவது அலை குறைந்தற்கு பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள, கர்நாடகாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.  இம்மாத துவக்கம் முதல் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் அனுமதி, புல்வெளிகளில் அமர தடை, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக சரிந்துள்ளது. இதனால் பூங்காக்கள், படகு இல்லங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அவ்வாறு வர கூடிய ஒரு சில சுற்றுலா பயணிகளும் நகரில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சுற்றுலா தலங்களுக்கு அருகில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் ஊட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வர கூடிய நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாக கூடிய சூழல் உருவாகி உள்ளது.

Related Stories: