நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஊட்டி,ஜன.22:  இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஊட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக நேற்று நடந்தது. கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். இதில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர துறை சார்ந்த அரசு அலுவலர்களும் ஆன்லைன் வழியில் பங்கேற்றனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக விவரங்கள் பெறப்பட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் இயக்குநகரத்தால் வருடந்தோறும் பயிற்சி, கண்டுனர் சுற்றுலா போன்ற அனைத்து இனங்களுக்கும் விவசாயிகளின் விருப்பப்படி தலைப்புகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. புதிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சிகள் தேவைப்படும் பட்சத்தில் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அடுத்த ஆண்டு செயல் திட்டத்தில் அனுமதி பெற்று பயிற்சி வழங்கப்படும்.

தோட்டக்கலைத்துறையின் மூலம் உயர்ரக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறி விதை மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கும் விலையில்லா கறவை பசுமாடு திட்டத்தினை ஒதுக்கி தருமாறு சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட அளவிலான இயற்கை விவசாயம் குழு கூட்டத்தில் விவசாயிகளிடையே மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதை அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டார். இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கவும், மாட்டு தீவன உற்பத்தியை அரசு நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

Related Stories: